×

ஊதியம், தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

*ஒப்பந்த தூய்மை பணியாளர்களால் பரபரப்பு

ஊட்டி : ஊதியம் மற்றும் தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிகள் மட்டுமின்றி சுற்றுலா இடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் நகராட்சி மூலமாகவே தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலமாகவே இப்பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் தீபாவளி முன் பணம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏராளமான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று மதியம் ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் அங்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விரைவில் ஊதியம் மற்றும் தீபாவளி முன்பணம் தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

The post ஊதியம், தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Wages ,Diwali ,Ooty Municipal Office ,Payroll ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...